பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25 - கெஅடிலான் கட்சியின் (பி.கே.ஆர்.) உதவித் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் துணைத் தகவல் பிரிவுத் தலைவர் 1 டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அறிவித்துள்ளார்.
கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தாம் உட்பட ஏழு தலைவர்கள் இதுவரை அறிவித்துள்ளது பி.கே.ஆர். கட்சியில் ஜனநாயகம் வலுவுடன் உள்ளதை பிரதிபலிக்கிறது என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறினார்.
பி.கே.ஆர். கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப கட்சியை ஜனநாயகப்படுத்துவதில் இதுபோன்ற ஒரு போட்டி ஆரோக்கியமானது எனக் கூறிய அவர், அடிமட்ட மக்கள் சிறந்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பார்கள் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார்.
குறிப்பாக 16வது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அடிமட்ட மக்களின் குரலை பிரதிபலிப்பதற்காக வரும் மே மாதம் நடைபெறும் கட்சியின் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முடிவை தாம் எடுத்ததாக அவர் கூறினார்.
இந்த முறை நடைபெறுவது வெறும் சாதாரண தேர்தல் அல்ல. ஏனென்றால் நாங்கள் (பிகேஆர்) ஒரு அரசாங்கமாக இருக்கும் சூழலில் கட்சியின் இலக்கை தீர்மானிக்கும் தேர்தல் இதுவாகும். வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு தயாராவதற்கு அடிமட்ட வாக்குகளை உண்மையிலேயே உயர்த்துவதற்கு நாம் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்றார் அவர்.
நேற்று மலேசிய கூட்டுறவு நிறுவனத்தில் (இக்மா) நடைபெற்ற இக்மா மற்றும் ஊடகப் பிரதிநிதிகளுடனான நோன்பு துறப்பு நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, பி.கே.ஆர். கட்சியை அடிமட்டத்திலிருந்து மத்திய தலைமை வரை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முடிவை ரமணன் அறிவித்தார்.
இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தாம் சந்தித்து வாழ்த்து பெற்றதாக அவர் கூறினார்.


