ஷா ஆலம், மார்ச் 25- கடன் தொல்லையால் ஏற்பட்ட நெருக்கடி ஆடவர் ஒருவரை கோத்தா டாமான்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றின் நகைக்கடையில் துப்பாக்கியேந்தி கொள்ளையிடும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
அத்தியாவசியப் பயன்பாட்டு நிறுவனம் ஒன்றில் போலீஸ் பந்துவான் (துணை போலீஸ்) பணியை ஆற்றி வரும் 32 வயதுடைய அந்த சந்தேக நபர் 20,000 வெள்ளி கடனை செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக போலீஸ் பந்துவானாக பணியாற்றி வரும் அந்த நபர் சம்பவ தினத்தன்று இரவு ஷிப்ட்டில் வேலை செய்ய வேண்டியிருந்ததாகவும் எனினும், நிறுவனத்தின் பாதுகாப்பில் இருந்த துப்பாக்கியை கடவுச் சொல்லை பயன்படுத்தி காலையிலே எடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த துப்பாக்கியைப் பயன்டுத்தி கொள்ளையை நிகழ்த்திய அந்த ஆடவர் பின்னர் அதனை அதே இடத்தில் வைத்து விட்டார். இந்த கொள்ளை தொடர்பான விசாரணைக்காக அந்நிறுவனத்தின் மேலாளர் மற்றும் நண்பரிடம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளோம் என்று ஹூசேன் சொன்னார்.
சுமார் பத்து நிமிடங்களுக்கு நீடித்த அக்கொள்ளையின் போது அவ்வாடவர் அந்த நகைக்கடையின் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த ஏழு தட்டுகளிலிருந்த நகைகளையும் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து ரொக்கத்தையும் கொள்ளையிட்டுத் தப்பினார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட அந்த ஆடவருக்கு முந்தையக் குற்றப்பதிவுகள் ஏதும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றில் உள்ள நகைக்கடையில் துப்பாக்கியேந்தி கொள்ளையிட்ட ஆடவர் சம்பவம் நிகழ்ந்த 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த கொள்ளையில் சுமார் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்டது.


