ஷா ஆலம், மார்ச் 25- தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதது மற்றும் சட்ட மீறலுக்கு எதிராக காஜாங் நகராண்மைக் கழகம் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.
ஊராட்சி மன்ற நிலையில் நல்லிணக்கமும் சீரான நிர்வாகமும் இருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று நகராண்மைக் கழகத் தலைவர் நஸ்லி முகமது தாயிப் கூறினார்.
அரசாங்க ஊழியர்கள் குறிப்பாக, அமலாக்க நிறுவனங்கள் தங்கள் பணிகளை ஆக்ககரமான முறையிலும் உயர்நெறியுடனும் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவுக்கு ஏற்ப இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, விதிகளைப் முறையாகப் பின்பற்றாதது மற்றும் சட்டங்களை மீறுவது போன்ற செயல்களுக்கு எதிராக அனைத்து துறைகளும், நகராண்மைக் கழகப் பணியாளர்களும் உரிய அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதே சமயம், அரசாங்க ஊழியர்கள் என்ற முறையில் அவர்கள் தொடர்ந்து கட்டொழுங்குடனும் உயர் நெறியுடனும் பொறுப்புணர்வுடனும் தங்கள் பணிகளை ஆற்றி வர வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
நாம் அனைத்து சக்தியையும் ஒன்று திரட்டி வீண் செலவுகளைத் தவிர்த்து சிக்கனமான முறையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார் அவர்.
மேலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க ரமலான் மாதத்தில் குறிப்பாக நோன்பு காலத்தில் வீண் விரயங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் நகராண்மைக் கழகத்தின் இவ்வாண்டிற்கான மூன்றாவது கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் வலியுறுத்தினார்.


