ஷா ஆலம், மார்ச் 24- சபாக் பெர்ணம், சுங்கை ஹாஜி டோரானியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறை கிண்ணத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் நேற்று கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த குழந்தையின் உடல் பொதுமக்களில் ஒருவரால் நண்பகல் 12.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சபாக் பெர்ணம் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது யூசோப் அகமது கூறினார்.
குழந்தையின் பாலினம் மற்றும் இனம் உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறிய அவர்,
அக்குழந்தை காலை 11.15 மணிக்கு இறந்துவிட்டது மருத்துவப் பரிசோதனையில்
உறுதி செய்யப்பட்டதாகச் சொன்னார்.
குழந்தையின் உடலை இரகசியமாக அப்புறப்படுத்துவதன் மூலம் பிரசவத்தை மறைத்ததாக நம்பப்படும் நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 318 இன் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோர் ஐமி லியானா முகமட் கைரானியை 018-2510452 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, இச்சம்பவம் நடந்த இடத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. பெட்ரோல் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையில் ஒரு பெண் பிரசவித்ததாகவும் பின்னர் குழந்தையை அவர் கைவிட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டது.


