கோலாலம்பூர், மார்ச் 24- இங்குள்ள மைன்ஸ் சாலை சந்திப்பில் நடத்தப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையை சித்தரிக்கும் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி தொடர்பில் மூன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக உள்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த சாலைத் தடுப்புச் சோதனையின் போது தவறான நடத்தை அல்லது விதி மீறல் நிகழ்ந்துள்ளதா என்பதை கண்டறிய இந்த விசாரணை நடத்தப்படுவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்தி வருகிறது. சாலைத் தடுப்புச் சோதனையின் போது விதிகள் மீறப்படும் விஷயத்தில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.
மூன்று போக்குவரத்து போலீஸ்காரர்கள் சாலைத் தடுப்புச் சோதனையை மேற்கொள்வதையும் வாகனமோட்டி ஒருவரிடமிருந்து அவர்கள் ஏதோ ஒன்றைப் பெறுவதையும் சித்தரிக்கும் 1 நிமிடம் 19 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்த சம்பவம் தொடர்பில் ஆருடங்களை வெளியிடுவதை தவிர்க்கும்படி பொது மக்களை அன்பழகன் கேட்டுக் கொண்டார்.


