ஷா ஆலம், மார்ச் 24 - இம்மாதம் 8 ஆம் தேதி கெமுனிங்-ஷா ஆலம் விரைவுச் சாலையில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையைத் தவிர்க்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைச் சித்தரிக்கும் 19 வினாடிகள் கொண்ட காரின் முகப்பு கேமரா (டேஷ்கேம்) காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இங்குள்ள செக்சன் 14 இல் உள்ள பெர்சியாரான் சுல்தானில் இரவு 9.00 மணியளவில் சாலைத் தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பட்ட போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
அப்போது மோடெனாஸ் கிரிஸ் ரக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அந்த பதின்ம வயது ஆடவர் சாலைத் தடுப்புச் சோதனையைத் தவிர்ப்பதற்காக திடீரென ஆபத்தான முறையில் யு-வளைவு எடுத்தார்.
போக்குவரத்துக்கு எதிரான தடத்தில் சென்ற மோட்டார் சைக்கிளை மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு அதிகாரி ஒருவர் நிறுத்த முயன்றார். இருப்பினும், உத்தரவைப் புறக்கணித்த அந்த இளைஞர் சாலையின் மையத் தடுப்புச் சுவரைச் சுற்றி ஆபத்தான முறையில் கடந்தார்.
அப்போது அந்த நெடுஞ்சாலையில் பயணித்த நான்கு சக்கர இயக்க வாகனத்தால் அந்த இளைஞர் மோதப்பட்டு காயமடைந்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இடது தொடை மற்றும் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அந்த இளைஞர் சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறிய இக்பால், அவர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த 17 வயது மாணவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் மோட்டார் சைக்கிளுக்கான சாலை வரி காலாவதியாகி விட்டதும் தெரியவந்ததாக அவர் கூறினார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 186வது பிரிவு, 279வது பிரிவு மற்றும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


