சிரம்பான், மார்ச் 24- இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 17 முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 500க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகள் பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டன.
பொது போக்குவரத்து வாகனங்களில் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களைக் மையமாகக் கொண்ட அந்த சோதனை நாடு முழுவதும் உள்ள பேருந்து முனையங்கள் மற்றும் பஸ் டிப்போக்களில் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
எச்.ஆர்.ஏ.2025 எனப்படும் நோன்புப் பெருநாள் சிறப்பு சாலை பாதுகாப்பு இயக்கம் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ள நிலையில் சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
விரைவு பேருந்துகளின் இயந்திரம், சக்கரம் மற்றும் பிரேக் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை இலக்காகக் கொண்டு இந்த எச்.ஆர்.ஏ. முன் நடவடிக்கை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கையின் போது சாலையைப் பயன்படுத்தும் தகுதியைக் கொண்டிராத 11 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டன. அந்த பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கு உடனடித் தடை விதிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டது என்று அந்தோணி லோக் சொன்னார்.
நேற்றிரவு இங்குள்ள தாமான் கம்போங் பஞ்சோரில் சமூகத் தலைவர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நோன்புப் பெருநாளின் போது நாடு முழுவதும் குறிப்பாக, விபத்துகள் அதிகம் நிகழும் இடங்களை மையமாகக் கொண்டு 2,500 ஜே.பி.ஜே. அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என அவர் சொன்னார்.
நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்து நிகழும் பகுதிகளில் ஜே.பி.ஜே. ரோந்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். இதன் மூலம் தவறு செய்தால் பிடிபடுவோம் என்ற அச்சத்தில் வாகனமோட்டிகள் கவனமுடன் சாலையைப் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.


