புக்கிட் மெர்தாஜம், மார்ச் 24- பணியின் போது விபத்தில் சிக்கும் சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தில் (சொக்சோ) சந்தா செலுத்தும் மற்றும் அலவன்ஸ் பெறும் தகுதி உள்ள தன்னார்வலர் குழு உறுப்பினர்கள் அந்த விபத்து குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று மனித அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் சுயத் தொழில் பாதுகாப்புத் திட்டத்தின் (எஸ்.கே.எஸ்.பி.எஸ்.) வாயிலாக அனுகூலங்களைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
பெரும்பலான தன்னார்வலர்கள் குறிப்பாக ஏ.பி.எம். எனப்படும் மலேசிய பொது தற்காப்பு படை உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெறும் தகுதி தங்களுக்கு உள்ளதை இன்னும் உணராமல் உள்ளனர் என்று அவர் சொன்னார்.
பணியின் போது விபத்தில் சிக்கி காயங்களுக்குள்ளாகும் ஏ.பி.எம். உறுப்பினர்கள் போன்ற தன்னார்வலர்கள் உடனடியாக சொக்சோவில் புகார் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஏ.பி.எம். உறுப்பினர்களுக்கு எஸ்.கே.எஸ்.பி.எஸ். திட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. புகார் அளிக்கப்படாத பட்சத்தில் சொக்சோவினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்படும். விபத்துகள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக அருகிலுள்ள சொக்சோ அலுவலகங்களில் புகார் அளிக்கும்படி ஏ.பி.எம். தரப்பினரை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள பெர்மாத்தாங் பாசீர் சமூக மண்டபத்தில் நடைபெற்ற ஏ.பி.எம்.மின் 63 வது நிறைவு தின ஏற்பாடு மற்றும் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்


