NATIONAL

ஓப் செலாமாட் இயக்கம் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகிறது- பாதுகாப்பு பணியில் 6,957 போலீசார் பங்கேற்பு

24 மார்ச் 2025, 3:06 AM
ஓப் செலாமாட் இயக்கம் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகிறது- பாதுகாப்பு பணியில் 6,957 போலீசார் பங்கேற்பு

கோலாலம்பூர், மார்ச் 24- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் 24வது ஓப் செலாமாட் இயக்கத்தின் போது 6,957 காவல் துறை அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுவர்.

சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுவோரில் 871 அதிகாரிகளும் 6,086 உறுப்பினர்களும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யுஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் ‘ஹோட்ஸ்பாட்‘ எனப்படும் அடிக்கடி விபத்து நிகழும் 25 இடங்களும் ‘பிளாக்ஸ்பாட்‘ எனப்படும் மரண விபத்துகள் நிகழும் 46 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இப்பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் அதே வேளையில் வாகன பழுது அல்லது அவசர உதவியை எதிர்பார்க்கும் வாகனமோட்டிகளுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள கூட்டரசு சாலைகள், மாநிலச் சாலைகள் மற்றும் ஊராட்சி மன்றச் சாலைகளில் அதிக விபத்துகள் நிகழும் 407 இடங்களும் மரண விபத்துகள் நிகழும் 76 இடங்களும் அடையளாம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் வாகனமோட்டிகள் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்வதை காவல் துறையினர் உறுதி செய்வர் என அவர் குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்று ‘நடைபெற்ற 24வது ஓப் செலாமாட் இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த 24வது ஓப் செலாமாட் இயக்கத்திற்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ‘வீட்டின் பாதுகாப்பு, இலக்கை நோக்கி பாதுகாப்பான பயணம்‘ எனும் கருப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.