கோலாலம்பூர், மார்ச் 24- திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களிலுள்ள சில மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் குறித்த முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் (டி.என்.பி.) தனது தொழில்நுட்பக் குழுவை தயார் படுத்தியுள்ளதோடு பேரிடரை எதிர்கொள்வதற்கான முழு தயார் நிலையிலும் உள்ளது.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பொது மக்களின் பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் சாத்தியம் உள்ளதாக டி.என்.பி. அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
தேசிய முன்கணிப்பு மற்றும் வெள்ள எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள வெள்ளம் தொடர்பான முன்கணிப்பை டி.என்.பி. கவனத்தில் கொண்டுள்ளது.
பயனீட்டாளர்களின் பாதுகாப்புக்கு டி.என்.பி. எப்போதும் முன்னுரிமை அளித்து வரும். அதே சமயம், நிலைமையைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக தொடர்புடைய நிறுவனங்களுடன் அணுக்கமாக செயல்படும் என அது குறிப்பிட்டது.
பொது மக்கள் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் அதேவேளையில் மின் சாதனங்களைக் கையாள்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதோடு அதிகாரிகளின் உத்தரவை ஏற்று பாதுகாப்பான பகுதிக்கும் இடம் பெயர வேண்டும் என அந்நிறுவனம் ஆலோசனை கூறியது.
நேற்று தொடங்கி சபா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் எச்சரிக்கை அளவில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை முன்னதாக எச்சரித்திருந்தது.


