அம்மான், மார்ச் 23- காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களை நிறுத்தவும் நீடித்த போர்நிறுத்தத்தை உறுதி செய்யவும் அனைத்துலக நிலையிலான உடனடி நடவடிக்கை தேவை என்று ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நேற்று நடத்திய தொலைபேசி சந்திப்பின் போது அவர் இந்த விவகாரத்தை முன்வைத்தார்.
ஏற்கனவே சிக்கலான நிலையில் உள்ள மனிதாபிமானச் சூழல் மேலும் மோசமடைவதைத் தடுக்க காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை மாமன்னர் வலியுறுத்தினார்.
காஸா மற்றும் மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கு எதிரான ஜோர்டானின் உறுதியான நிலைப்பாட்டையும் மன்னர் அப்துல்லா மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மீதான தொடர்ச்சியான அத்துமீறல்கள் அங்கு பெரும் ஆபத்தை உருவாக்கியுள்ளதாக மன்னர் கூறினார்.


