கோலாலம்பூர், மார்ச் 23 - மூன்று மாநிலங்களில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8,274 பேராகக் குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 9,218 ஆக இருந்தது.
ஜோகூர்
இம்மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,485 குடும்பங்களைச் சேர்ந்த 8,040 பேரிலிருந்து 2,068 குடும்பங்களைச் சேர்ந்த 6,911 பேராக குறைந்துள்ளது.
ஐந்து மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 43 நிவாரண மையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
ஜோகூர் பாரு மாவட்டத்தில் 3,435 பேரும் அதனைத் தொடர்ந்து குளுவாங் மாவட்டத்தில் 1,620 பேரும் பொந்தியானில் 1,426 பேரும் பத்து பஹாட்டில் 340 பேரும் கோத்தா திங்கியில் 90 பேரும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சபா
வெள்ளம் காரணமாக இம்மாநிலத்தில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 127 குடும்பங்களைச் சேர்ந்த 393 ஆக உயர்ந்துள்ள வேளையில் நேற்றிரவு 70 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேராக இருந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைச் செயலகம் தெரிவித்தது.
அவர்கள் தற்போது பியூஃபோர்ட், சிபித்தாங் மற்றும் கெனிங்காவ் ஆகிய இடங்களில் உள்ள ஐந்து நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சரவாக்
இங்கு இன்று காலை நிலவரப்படி வெள்ளத்தால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 970 ஆக தொடர்ந்து இருந்து வருகிறது.
அவர்கள் தற்போது சிபு மற்றும் காப்பிட் முழுவதும் உள்ள ஆறு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜேபிபிஎன் செயலகம் தெரிவித்துள்ளது.


