கிள்ளான், மார்ச் 23- தெக்குன் நேஷனல் எனப்படும் தேசிய தொழில்முனைவோர் பொருளாதார நிதிக்கு திரும்பச் செலுத்தப்படாத அல்லது வாராக் கடன் மதிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு 12 கோடி வெள்ளியாக குறைந்தது. இதற்கு முன்னர் இந்த கடன் தொகையின் மதிப்பு 38 கோடி வெள்ளியாக இருந்தது.
கடந்தாண்டு தகுதி உள்ள தொழில்முனைவோருக்கு 110 கோடி வெள்ளி கடன் வழங்கப்பட்ட வேளையில் முந்தையக் கடன் தொகையின் வசூலிப்பும் அதிகரித்ததாக தென்குன் நேஷனல் தலைவர் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமிட் கூறினார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் தொகை கடந்தாண்டு திரும்பப் பெறப்பட்டது. கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையின் வாயிலாக வாராக் கடன் மதிப்பு 26 கோடி வெள்ளியாக குறைந்துள்ளது.
ஆகவே, தெக்குன் நேஷனல் என்.பி.எல். எனப்படும் வாராக் கடன் மதிப்பை 12.6 விழுக்காட்டிலிருந்து 9.8 விழுக்காடாக குறைத்துள்ளது என்று நேற்று இங்குள்ள கிள்ளான், தாமான் சுங்கை பினாங்கில் தொழில்முனைவோர் சந்திப்பு மற்றும் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
நிதி ஆலோசக மற்றும் கடன் மேலாண்மை நிறுவனத்துடன் (ஏ.கே.பி.கே.) இணைந்து தெக்குன் நேஷனல் மேற்கொண்ட விழிப்புணர்வு இயக்க நடவடிக்கைள் இந்த என்.பி.எல். குறைவுக்கு காரணமாக விளங்கியது. இதன் மூலம் தொழில்முனைவோர் நிதியை முறையாக நிர்வகித்து வர்த்தகத்தை திட்டமிடுவதன் மூலம் முந்தையக் கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியது என்றார் அவர்.
இது தவிர, தொழில்முனைவோர் அடிப்படை பயிற்சி, தொடர்ச்சியான கண்காணிப்பு, நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள தொழில்முனைவோருக்கு நிதி மறுசீரமைப்பு உதவி, நெகிழ்வான முறையில் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களும் அமல்படுத்தப்பட்டன என்று அவர் சொன்னார்.


