கோல திரங்கானு, மார்ச் 23- ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தை மோதியதில் அதிலிருந்து நோயாளி ஒருவரும் பயணியும் காயமடைந்தனர்.
இச்சம்பவம் கோல திரங்கானு-குவாந்தான் சாலையின் 49வது கிலோ மீட்டரில் மாராங், ஜம்பு போங்கோக் அருகே நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து இன்று விடியற்காலை 12.30 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்த தாக மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது சோபியான் ரெட்சுவான் கூறினார்.
நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான அந்த டோயோட்டா ஹியேஸ் ரக ஆம்புலன்ஸ் வண்டியின் பின்புற இடது சக்கரம் திடீரென வெடித்ததைத் தொடர்ந்து அது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது தொடக்கக்கட்ட விசாணையில் தெரிய வந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
கோல திரங்கானு, சுல்தானா நோரா ஜஹிரா மருத்துவமனையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 வயது பெண் நோயாளி, 28 வயதுடைய மருத்துவர், இரு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் லேசான காயங்களுக்குள்ளான ஆம்புலன்ஸ் ஓட்டுர் மற்றும் இதரப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர் என்றார் அவர்.


