புத்ராஜெயா, மார்ச் 23- வாகன பரிசோதனையை விரைவுபடுத்த ஏதுவாக வாகன உரிமையாளர்கள் வரிசை எண்களைப் பெறுவதற்கு லஞ்சம் பெற்ற சந்தேகத்தின் பேரில் வாகன சோதனை மையத்தில் மற்றொரு முகவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
அந்த சந்தேக நபரை விசாரணைக்காக நான்கு நாட்கள் காவலில் வைப்பதற்கு எம்.ஏ.சி.சி. விடுத்த கோரிக்கையை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூத்த உதவிப் பதிவாளர் அசாயிடா துன் நஜ்வா முகமது நசுத்தியோன் ஏற்றுக்கொண்டார்.
வாகன சோதனை மையத்தில் வாகன சோதனைக்கான வரிசை எண்களைப் விரைவாகப் பெறுவதற்காக வாகன உரிமையாளர்களிடமிருந்து அந்த சந்தேக நபர் 40,000 வெள்ளி வரை லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுவதாக எம்.ஏ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்ராஜெயா சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) மற்றும் கணினி மயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையம் (புஸ்பகோம்) ஆகியவற்றுடன் இணைந்து எம்.ஏ.சி.சி. நேற்று மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை
மேற்கொள்ளப் பட்டது.
சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாகன சோதனைகளை விரைவுப்படுத்தும் கும்பலின் ஒரு பகுதியினர் என நம்பப்படும் நபர்கள் மீதான விசாரணையும் இதில் அடங்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
பொதுவான வாகனப் பதிவு எண்களைப் பயன்படுத்தி மொத்தமாக முன்பதிவு செய்வதன் மூலம் பல நபர்கள் புஸ்பகோமின் முன்பதிவு முறையை தவறாகப் பயன்படுத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், அந்த கைது நடவடிக்கையை புத்ராஜெயா எம்.ஏ.சி.சி. இயக்குநர் அஜிசுல் அகமது சர்க்காவி உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(a)(A)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.


