புத்ராஜெயா, மார்ச் 21- அம்பாங்கில் இம்மாதம் 19ஆம் தேதி
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தோனேசிய சட்டவிரோதக்
குடியேறிகளை நாட்டிற்குள் கொண்டு வரும் மற்றும் திருப்பி அனுப்பும்
முகவர் கும்பலின் நடவடிக்கையை மலேசிய குடிநுழைவுத் துறை
முறியடித்துள்ளது.
பொது மக்களின் புகார் மற்றும் உளவு நடவடிக்கையில் கிடைத்த
தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட குடிநுழைவுத்
துறையின் அமலாக்கத் தரப்பினர், புலம் பெயர்ந்த அந்நிய நாட்டினரை
ஏற்றி வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட பெரேடுவா அருஸ் வாகனத்தை
தடுத்து நிறுத்தியதாகக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்
டத்தோ ஜக்காரியா ஷபான் கூறினார்.
வாகன ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்களாக
செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தோனேசிய பிரஜைகளான ஒரு
பெண்ணும் இரு ஆடவர்களும் அதில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அப்பகுதியிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் இருந்த ஒரு பெண் மற்றும்
நான்கு ஆடவர்களை உள்ளடக்கிய இந்தோனேசியர்களை சோதனையிட்ட
போது அங்கீகரிக்கப்டாத வழித்தடங்கள் வாயிலாக தாங்கள் நாட்டிலிருந்து
வெளியேறவிருந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டதாக அவர் சொன்னார்.
சட்டவிரோத முகவர்களாகவும் போக்குவரத்து சேவை வழங்குநர்களாகவும்
செயல்பட்டவர்களும் இந்தோனேசியப் பிரஜைகள் எனக் கூறிய அவர்,
அவர்களிடமிருந்து சேவையைப் பெற்றவர்களில் பெரும்பாலோர் ஜோகூர்
மற்றும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.
சட்டவிரோத அந்நிய நாட்டினரை சட்டவிரோத வழித்தடங்கள் வாயிலாக
நாட்டிற்குள் கொண்டு வரும் மற்றும் தாயகத்திற்கு திரும்ப அனுப்பும் நடவடிக்கையில் இக்கும்பல் ஈடுபட்டு வந்ததாகவும், இச்சேவைக்கு அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தலா 4,500 வெள்ளி வரை வசூலித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.


