கோலாலம்பூர், மார்ச் 21- இங்குள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயில் மற்றும் ஜாலான் அம்பாங் பகுதியில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 12 வயதுடைய இரு சிறுமிகள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை போக்குவரத்து இலாகா மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கையில் 196 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதோடு 19 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.
இந்த சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட இச்சோதனையில் வானமோட்டும் லைசென்ஸ் இல்லாதது தொடர்பில் அதிக குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
புகைப்போக்கி மற்றும் பிரேக் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் சிறுமிகளும் பந்தயத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது தவிர நிறைய குற்றங்களும் இச்சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
நேற்று, கூட்டரசு பிரதேச ஜே.பி.ஜே.வின் இஹ்யா ரமலான் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களாவர். மேல் நடவடிக்கைக்காக குறைந்த வயதுடையவர்களின் பெற்றோர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர் என்றார் அவர்.
எத்தகைய நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். குறைந்த வயதினரை சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட அனுமதித்ததற்காக அவர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


