ஜெர்தே, மார்ச் 21- உலு பெசுட்டில் உள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் நெல் விற்பனை பணத்தை மோசடி செய்தது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஆடவர் ஒருவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக
38 வயதான அந்த நபரை வரும் திங்கட்கிழமை வரை தடுப்புக்காவலில் வைக்க செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அகமது பாட்லி மாமுட் உத்தரவு பிறப்பித்தார்.
பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த சந்தேக நபர் நேற்று காலை 8.00 மணியளவில் இம்மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அமருடின் அகமது @ அபு தெரிவித்தார்.
தங்களிடமிருந்து வாங்கிய நெல்லுக்கு பணம் செலுத்தாமல் அந்த ஆடவர் ஏமாற்றியதைத் தொடர்ந்து தங்களுக்கு 124,101 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி விவசாயிகள் கடந்த புதன்கிழமை புகார் அளித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கம்போங் தெலாகா நிபோங்கில் செயல்படும் ஒரு கொள்முதல் நிறுவனம் ஒன்று நெல் விற்பனைக்கு பணம் செலுத்தாததால் இவ்வாண்டு நோன்புப் பெருநாளை சிக்கலான சூழலில் கொண்டாட வேண்டிய கட்டாயம் உலு பெசுட்டில் உள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக
பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.


