சிரம்பான், மார்ச் 21- நெகிரி செம்பிலானில் சட்டவிரோத குடியேறிகளின் புகலிடமாக விளங்கும் பகுதிகளில் சிரம்பான் நகரமும் ஒன்றாகும். இங்கு கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1,655 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டனர்.
சிரம்பானைத் தொடர்ந்து போர்ட்டிக்சனில் 220 சட்டவிரோத குடியேறிகளும் கோலா பிலாவில் 124 குடியேறிகளும் ஜெம்போலில் 117 குடியேறிகளும் தம்பினில் 89 குடியேறிகளும ஜெலுபுவில் 64 குடியேறிகளும் ரெம்பாவில் 23 குடியேறிகளும் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் கென்னத் டான் ஐ கியாங் தெரிவித்தார்.
சிரம்பானை உள்ளடக்கிய நீலாயில் அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதால் அப்பகுதி சட்டவிரோத குடியேறிகளின் மையமாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
அவர்களில் பெரும்பாலோர் நீலாய் 3 உள்ளிட்ட தொழில்துறை பகுதிகளில் வேலை செய்கின்றனர். அதே சமயம் போர்ட்டிக்சனில் உணவகங்களில் குறிப்பாக தோம்யாம் உணவு விற்பனை மையங்களில் கணிசமானோர் வேலை செய்கின்றனர் என்றார் அவர்.
நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையின் ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான இப்தார் நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
தமது துறை கடந்தாண்டு மாநிலம் முழுவதும் 874 நடவடிக்கைகளை மேற்கொண்டு 7,746 வெளிநாட்டினரை சோதனை செய்த வேளையில் செல்லத்தக்க ஆவணங்களை கொண்டிராத 2,093 பேர் தடுத்து வைக்கப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.
முறையான அனுமதி இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக 58 முதலாளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டதோடு மேலும் 197 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக டான் கூறினார்.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் அதாவது மார்ச் 19ஆம் தேதி வரை மொத்தம் 8,358 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டு 393 சட்டவிரோத குடியேறிகளும் 16 முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
முறையான அனுமதியின்றி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் விஷயத்தில் தமது துறை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும்
அவர்கள் மீது வழக்குத் தொடுப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


