கோலாலம்பூர், மார்ச் 21 - எதிர்வரும் மார்ச் 27 ஆம் தேதி அன்று ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்திருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உடைக்கப்படாது மாறாக அனைவருக்கும் ஏதுவாக அக்கோயிலை இட மாற்றம் செய்ய முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, கோயில் நிர்வாகத்தினர் இந்த விவகாரம் தொடர்பாக தன்னை அனுகியதோடு பலமுறை இது தொடர்பாக விவாதங்களும் சந்திப்புகளும் நடந்ததை கோபிந்த் சிங் சுட்டிக்காட்டினார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனுடன் இணைந்து இதற்கான சுமூகத் தீர்வை காண்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
இந்த ஆலய விவகாரத்திற்கு நியாயமாகவும், பக்தர்களின் மனம் புண்படாத வகையிலும். அனைத்துத் தரப்புக்கும் இணக்கமான தீர்வை காண்பதற்கான முயற்சியை தாம் மேற்கொண்டு வருவதோடு இந்த விவகாரத்தை தாம் அமைச்சரவை கூட்டத்தில் பல முறை எழுப்பியிருப்பதாகவும் கோபிந்த் சிங் கூறினார்.
இந்த நிலையில் கோயிலை இடமாற்றம் செய்வதற்கான மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏதுவான சிறந்த முடிவைப் பெறுவதற்கு விவாதங்கள் நடந்துள்ளன.
இந்த கோயிலை புதிய இடத்திற்கு மாற்ற, கோவில் நிர்வாகத்திற்கு நியாமான கால அவகாசம் வழங்கப்படும் என கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமட் ஷரிப், கோவில் நிர்வாகத்திடம் நேரில் சென்று உறுதியளித்துள்ளார்.
எனவே இந்த விவகாரத்தில் நல்லதொரு தீர்வைக் காண்பதற்கு அனைத்து தரப்பினரும் சுமூகமான முறையில், ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோபிந்த் சிங் கேட்டுக்கொண்டார்.


