சிப்பாங், மார்ச் 21- கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் வாயிலாக 60,726 தொழில்முனைவோர் 858,068 வெள்ளி மதிப்புள்ள உதவிகளைப் பெற்றுள்ளதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
அக்காலக்கட்டத்தில் சிப்பாங்கிலுள்ள தொழில்முனைவோருக்கு 5,957
முன்னெடுப்புகள் மூலம் 65,147 வெள்ளி விநியோகிக்கப்பட்டது என்று அவர்
சொன்னார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் மைக்ரோகிரடிட் கடனுதவித் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் தொழில்முனைவோரியல் முறையை மேம்படுத்துவதில் ஹிஜ்ரா கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது என்று அவர் சொன்னார்.
தொழில் முனைவோரின் வர்த்தக விரிவாக்கம் மற்றும் வாழ்க்கைத் தர
உயர்வுக்கு உதவுவதில் ஹிஜ்ரா தொடர்ந்து பங்காற்றி வருகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.
ஹிஜ்ராவின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி ‘10 வருட சிறப்பு-தொழில்
முனைவோரை மேம்படுத்துதல்‘ எனும் பிரச்சார இயக்கத்தை இங்குள்ள
தாமான் புத்ரா பெர்டானா ரமலான் சந்தையில் தொடக்கி வைத்த போது
அவர் இதனைக் கூறினார்.
சிறுகடனுதவித் திட்டத்தில் முன்னோடியாக விளங்கும் ஹிஜ்ராவின்
பத்தாண்டு கால சாதனையைக் கொண்டாடும் வகையில் இந்த பிரச்சார
இயக்கம் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த பிரச்சார இயக்கத்தின் முதல் கட்ட நிகழ்வு சிப்பாங்கில்
நடத்தப்படுகிறது. மாநிலத்திலுள்ள இதர அனைத்து மாவட்டங்களிலும்
இத்தகைய பத்து நிகழ்வுகளை இவ்வாண்டு முழுவதும்
நடத்தவிருக்கிறோம் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் பிளாட்பார்ம் சிலாங்கூரின் 10 வெள்ளி மதிப்புள்ள 500
இலக்கவியல் கூப்பன்களை நஜ்வான் பொது மக்களுக்கு விநியோகித்தார்.


