ஜெர்த்தே, மார்ச் 21- கோல திரெங்கானு–கோத்தா பாரு சாலையில் கம்போங் பாடாங் லண்டாக் அருகே நேற்றிரவு நிகழ்ந்த மோட்டார் சைக்கிள்- நான்கு சக்கர இயக்க வாகனம் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
இரவு 8.20 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான ஹோண்டா இஎக்ஸ்5 மோட்டார் சைக்கிளோட்டியான முகமது நஸ்ரி முகமட் நோர் (வயது 59) மற்றும் அவரது மகன் முகமது ஹமாஸ் (வயது 25) ஆகியோர் இரவு 10.30 மணியளவில் பெசுட் மருத்துவமனையில் உயிரிழந்ததாகப் பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசாமுடின் அகமது @ அபு தெரிவித்தார்.
சாலையின் இடது பக்கத்தில் உள்ள அட்-தக்வா பள்ளிவாசலுக்குச் செல்வதற்காக
அந்த மோட்டார் சைக்கிள் ஒரு யு-வளைவு எடுத்து சாலையின் நடுப் பாதைக்கு தடம் மாறிய போது ஜெர்த்தேயிலிருந்து கம்போங் பாடாங் லண்டாக் நோக்கிச் சென்று கொண்டிருந்த டோயோட்டா ஹைலக்ஸ் வாகனம் அவர்களை மோதியது தொடக்ககட்ட விசாரணையில் தெரிய வந்ததாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தின் விளைவாக கடும் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டியும் பயணியும் பெசுட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே நேரத்தில் டோயோட்டா ஹைலக்ஸ் ஓட்டுநரான 27 வயது நபர் காயமின்றித் தப்பினார் என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அசமுடின் கூறினார்.


