காஸா நகர், மார்ச் 21- கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அப்பிராந்தியத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை முதல் 710 பேரின் உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வேளையில் மேலும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சின் பேச்சாளர் கலீல் அல்-டக்ரான் அனடோலு ஏஜென்சி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் காயமடைந்தவர்களில் 70 விழுக்காட்டினர் சிறார்கள் மற்றும் பெண்கள் என்று அவர் கூறினார்.
காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் உடனடி மருத்துவ உதவி இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களில் பலர் உயிரிழந்தனர். காஸா மீதான இஸ்ரேலின் கடுமையான தடைகள் காரணமாக அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்த போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை மீறி கடந்த செவ்வாய்க்கிழமை காஸா தீபகற்பத்தில் இஸ்ரேலியப் படைகள் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தின.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காஸாவில் இஸ்ரேலின் மிருகத்தனமான இராணுவ நடவடிக்கையில் கிட்டத்தட்ட 50,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 112,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


