கோலாலம்பூர், மார்ச் 21- மலேசியாவின் மகிழ்ச்சிகர குறியீட்டின் 2025ஆம்
ஆண்டிற்கான 20 மிக மகிழ்ச்சிகர நகரங்கள் பட்டியலில் பெட்டாலிங்
ஜெயா, கிள்ளான் அரச மாநகர் மன்றம் மற்றும் அம்பாங் ஜெயா
ஆகியவை இடம் பெற்றுள்ளன.
புத்ராஜெயாவில் அனுசரிக்கப்பட்ட தேசிய நிலையிலான அனைத்துலக
மகிழ்ச்சிகர தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்பட்ட நகரங்களில்
மாவட்ட மன்ற நிலையில் எட்டு நகரங்களும் மாநகர் மன்றம்/நகராண்மைக் கழக நிலையில் 12 நகரங்களும் அடங்கும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
மாவட்ட மன்ற நிலையில் பகாங் மாநிலத்தின் லிப்பிஸ், சபாவின்
தெலுப்பிட், கேமரன் மலை, கோல கிராய், பண்டார் பாரு, ஜெராண்டூட்,
ஜெலுபு ஆகிய நகரங்கள் மகிழ்ச்சிகரமான நகரங்களாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.
அதே சமயம் நகராண்மைக் கழகம்/ மாநகர் மன்ற நிலையில் தேர்வு
பெற்ற நகரங்களில் பிந்துலு, தெமர்லோ, ஜாசின், போர்ட்டிக்சன்,
பெட்டாலிங் ஜெயா, கிள்ளான் அரச நகர், அம்பாங் ஜெயா ஆகியவையும்
அடங்கும்.
இந்த மகிழ்ச்சிகர நகர குறியீட்டு ஆய்வில் தீபகற்ப மலேசியா, சபா, சரவா
மற்றும் கூட்டரசு பிரதேசங்களிலுள்ள மொத்தம் 153 ஊராட்சி மன்றங்கள்
இடம் பெற்றன. அவற்றில் 115 ஊராட்சி மன்றங்கள் மகிழ்ச்சிகர நகர
அந்தஸ்தைப் பெற்ற வேளையில் 38 மன்றங்கள் மிதமான மகிழ்ச்சிகர
நகராங்களாகத் தேர்வு பெற்றன.


