கோலாலம்பூர், மார்ச் 21 - இடைநிலைப் பள்ளி வரையில் கல்வியை கட்டாயமாக்கும் கல்வி சட்டம் 550 அல்லது 1996இல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா, பள்ளியில் மாணவர் வருகையை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வில் கவனம் செலுத்தும்.
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தவறும் அல்லது புறக்கணிக்கும் பெற்றோருக்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இறுதி முயற்சியாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
15-வது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தில், இச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தேவையான அனைத்து கல்வி வசதிகள், அணுகல் மற்றும் உதவிகள் முன்கூட்டியே வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும்.
அரசாங்கம், சமூகம் மற்றும் பெற்றோர்களிடையே ஆதரவு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு வலுப்படுத்தப்படுவதை அச்சட்ட மசோதா உறுதி செய்யும் என்று ஃபட்லினா கூறினார்.
2025-ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்த ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மலேசிய குழந்தைக்கும் அவர்களின் மாறுபட்ட பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சியாக, தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரை கல்வியை கட்டாயமாக்குவதற்கான சட்ட மசோதா வரைவை தமது தரப்பு தற்போது மதிப்பாய்வு செய்து வருவதாக தேசிய சட்டத்துறை அலுவலகம், ஏஜிசி கூறியதை, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பெர்னாமா


