கோத்தா பாரு, மார்ச் 21- தேங்காய்களை அண்டை நாட்டிற்கு கடத்தும்
முயற்சியை பொது நடவடிக்கைப் பட்டாளத்தின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு
படைப்பிரிவு வெற்றிகரமாக முறியடித்தது. தும்பாட், கம்போங்
சிம்பாங்கானில் உள்ள சட்டவிரோதக் கிடங்கு ஒன்றில் நேற்று முன்தினம்
மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் மொத்தம் 38,580 தேங்காய்கள்
கைப்பற்றப்பட்டன.
பிற்பகல் 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட ஓப் தாரிங் வாவாசான்
சோதனை நடவடிக்கையின் போது இந்த தேங்காய்கள் பறிமுதல்
செய்யபட்டதாக தென்கிழக்கு பி.ஜி.ஏ. கட்டளை அதிகாரி டத்தோ நிக்
ரோஸ் அஸான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
இந்நடவடிக்கையின் போது டிரெய்லர் லோரி ஒன்றைத் தடுத்து நிறுத்தி
சோதனையிட்ட அதிகாரிகள் சட்டவிரோத வழித்தடத்தின் மூலம் அண்டை
நாட்டிற்கு கடத்தப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படும் 38,580 தேங்காய்களை
பறிமுதல் செய்தனர் என்று அவர் சொன்னார்.
மேல் நடவடிக்கைக்காக 38 வயதுடைய லோரி ஓட்டுனரோடு 10 லட்சத்து
30 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள தேங்காய்கள் மற்றும் லோரி உள்ளிட்ட
பொருள்கள் பெங்காலான் குபோர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச்
செல்லப்பட்டன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பில் 1965ஆம் ஆண்டு கூட்டரசு
விவசாய சந்தை வாரியச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது என்றார் அவர்.


