கோலாலம்பூர், மார்ச் 21 - கடுமையான இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பது வயது சிறுமியான ஹர்ஷீதா சாயின் குடும்பத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை அளித்துள்ளார்.
சிலாங்கூர், பத்து கேவ்ஸில் அச்சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் பவுஸி, இந்த நன்கொடையை அவர்களிடம் வழங்கினார்.
சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் பயிலும் அந்த மாணவி 70 முதல் 75 சதவீதம் வரையிலான ஆக்ஸிஜன் அளவுடன் போராடி வருவதாக அகமது ஃபர்ஹான் தனது முகநூல் பதிவில் கூறினார்.
இது வழக்கமான அளவான 95 முதல் 99 சதவீதத்தை விட மிகக் குறைவாகும். ஆகவே, சிறுமி ஹர்ஷீதா அமெரிக்காவின் பாஸ்டன் சிறார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் சிகிச்சைக்கான செலவு 350,000 அமெரிக்க டாலரை எட்டுகிறது. இந்த தொகையின் அளவு அவரது குடும்பத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.
ஹர்ஷீதாவின் சிகிச்சைக்கு சமூகமும் உரிய பங்களிப்பை வழங்குவதற்குரிய வாய்ப்பினை பிரதமரின் இந்த நன்கொடை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாக அகமது ஃபர்ஹான் குறிப்பிட்டார்.
அந்தச் சிறுமி உரிய சிகிச்சையை விரைவில் பெற்று பூரணக் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


