குவாந்தான், மார்ச் 20 - மொத்தம் 47,600 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாக கொண்டுவரப்பட்ட 22 குற்றச்சாட்டுகளை குடிநுழைவு அதிகாரி ஒருவர் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.
அமலாக்க சோதனை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே வெளியிடுவதற்காக தெமர்லோ, ரவுப் மற்றும் கேமரன் ஹைலேண்ட்ஸில் உள்ள பொழுதுபோக்கு மையங்கள், உடம்புபிடி நிலையங்கள், தோட்டங்கள் மற்றும் வெட்டுமரத் தொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக தெமர்லோ நகரின் தெமர்லோ ஜெயாவைச் சேர்ந்த 39 வயதான கமாருள் அமிலின் ஜைனல் அரிஃபின் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2018 மார்ச் 28 முதல் 2021 செப்டம்பர் 30 வரை தெமர்லோவில் உள்ள ஒரு வங்கியிலுள்ள தனது சேமிப்பு கணக்கில் 900 முதல் 3,000 வெள்ளி வரை லஞ்சம் பெற்றதாக தெமர்லோ அமலாக்க மற்றும் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் அந்நபர் மீது முதல் முதல் 10 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 2018 ஜனவரி 2 முதல் 2021 நவம்பர் 8 வரை அதே வங்கியில் இணையப் பரிமாற்றம் வழி 1,000 முதல் 5,000 வெள்ளி வரை லஞ்சம் பெற்றதாக அவருக்கு எதிரான 11 முதல் 22 வரையிலான குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு உத்தரவாதத்துடன் 20,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க பகாங் எம்.ஏ.சி.சி. வழக்கறிஞர் கமாரியா செமான் பரிந்துரைத்தார்.
இருப்பினும், எதிர்த்தரப்பு வழக்கறிஞர் டத்தோ சைட் அசிமல் சைட் அபு பாக்கார், தனது கட்சிக்காரருக்கு குறைந்த ஜாமீன் விதிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 ஜாமீனில் கமாருள் அமிலினை விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி சஸ்லினா சாஃபி, அவர் அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.


