ஜோகூர் பாரு, மார்ச் 20 - ஜோகூரில் நேற்று பல மணி நேரம் நீடித்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாவட்டங்களில் 10 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 257 குடும்பங்களைச் சேர்ந்த 893 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான் ஸ்ரீ அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.
ஜோகூர் பாருவில் 567 பேரும் கூலாயில் 269 பேரும் பொந்தியானில் 57 பேரும்
நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
கம்போங் சுங்கை சியாமில் உள்ள சுங்கை சியாம் ஆற்றில் நீர் மட்டம் (20.85 மீட்டராகவும் கம்போங் லாவுட் ஸ்கூடாய் ஆற்றில் 4.24 மீட்டராகவும் கம்போங் பாசீர், பாரிட் கெலிலிங் ஆற்றில் 1.01 மீட்டராகவும் உள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜோகூரில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும் என்று அஸ்மி மேலும் கூறினார்.
இதனிடையே, சபாவில் உள்ள சண்டகான் மற்றும் பெலூரான் ஆகிய பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.
பெலூரானில் இரண்டு நிவாரண ளையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
காலை 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நிவாரண மையங்களுக்கு மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
சபாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சண்டகான் மற்றும் பெலூரானில் தற்போது
லேசான மழை பெய்து வருவதாகக் கூறப்படுகிறது.


