கோலாலம்பூர், மார்ச் 20 - சுமார் 4 கோடியே 15 லட்சம் வெள்ளியை உட்படுத்திய இணைய முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில் நாடு முழுவதும் 46 விசாரணை அறிக்கைகளை காவல் துறையினர் திறந்துள்ளனர்.
இந்த முதலீட்டுத் திட்ட மோசடியில் மொத்தம் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 15 பேர் பணி ஓய்வு பெற்றவர்களாவர் என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
மேலும், இத்திட்டத்தில் ஏமாற்றப்பட்டவர்களில் 12 வர்த்தகர்கள், தனியார் துறைகளில் பணியாற்றும் 10 பேர், மூன்று ஆசிரியர்கள், இரு பொறியாளர்கள் மற்றும் தலா ஒரு வங்கி அதிகாரி, கணக்காளர், இல்லத்தரசி ஆகியோரும் அடங்குவர் என அவர் சொன்னார்.
கிரிப்டோ நாணயம் தொடர்பான விளம்பரத்தை பேஸ்புக் பக்கத்தில் கண்டு அந்த முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டதாக 71 வயது முதியவர் ஒருவர் தனது புகாரில்
குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மோசடிக் கும்பல் வழங்கிய இணைப்பில் பதிவு செய்து கொண்ட அந்த முதியவர் 12 வங்கிக் கணக்குகளுக்கு 42 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 50 லட்சம் வெள்ளியை மாற்றியதாக அவர் சொன்னார்.
தனது லாபத் தொகையை மீட்க முயன்ற போது பரிசீலனைக் கட்டணமாக 230,000 அமெரிக்க டாலரை செலுத்தும்படி அக்கும்பல் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்து போலீசில் புகார் செய்ததாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு மொத்தம் 37 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதை போலீசார் கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


