புத்ராஜெயா, மார்ச் 20 - பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்
போன மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச்.370 விமானத்தை
தேடுவது தொடர்பான ஓஷியன் இன்ஃபினிட்டி (யுனைடெட் கிங்டம்)
நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதலின் வாயிலாக தேடுதல் பணி தொடர்பில் அந்த
நிறுவனத்துடன் செய்து கொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தில் மலேசிய
அரசாங்கத்தின் சார்பில் போக்குவரத்து அமைச்சு கையெழுத்திடும் என்று
அதன் அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
அமைச்சரவையின் இந்த முடிவைத் தொடர்ந்து எம்.எச்.370 விமானத்தை
கடலுக்கடியில் தேடும் பணியை மீண்டும் தொடர்வதற்கு வாய்ப்பு
கிட்டியுள்ளது. இந்தியப் பெருங்கடலின் தெற்கே 15,000 சதுர கிலோ
மீட்டரை உள்ளடக்கிய புதிய பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். ‘கண்டுபிடிக்காவிட்டால் கட்டணம் இல்லை‘ என்ற
கோட்பாட்டின் அடிப்படையில் இந்த தேடுதல் பணியை அந்நிறுவனம்
மேற்கொள்ளும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் படி எம்.எச்.370 விமானத்தை கண்டுபிடிக்காவிட்டால்
அந்நிறுவனத்திற்கு அரசாங்கம் எந்த கட்டணத்தையும் வழங்காது. அந்த
விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கபடும் பட்சத்தில் அரசாங்கம் ஓஷியன்
இன்ஃபினிட்டி நிறுவனத்திற்கு 7 கோடி அமெரிக்க டாலரை கட்டணமாக
வழங்கும் என லோக் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய
பெருங்கடலின் தெற்கே 112,000 சதுர கிலோ மீட்டரை உள்ளடக்கிய
பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. எனினும், விமானம்
கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தனது
பணியை நிறுத்திக் கொண்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி 227 பயணிகள் மற்றும் 12
பணியாளர்களுடன் சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட எம்.எச்.370
விமானம் ராடார் திரையிலிருந்து காணாமல் போனது.


