கூச்சிங், மார்ச் 20- விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப்
பெருநாள் காலத்தில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்) மற்றும்
கிழக்கு கரை நெடுஞ்சாலை (எல்.டி.பி.) ஆகியவற்றில் அதிக விபத்துகள்
நிகழும் சாத்தியம் உள்ள 12 இடங்களை மலேசிய தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட அந்த இடங்களில் வரும் மார்ச் 29 முதல் ஏப்ரல்
3 வரை தனது குழுவினர் தயார் நிலையில் வைக்கப்படுவர் என்று
அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது
கூறினார்.
இந்த இரு நெடுஞ்சாலைகள் எங்களின் இலக்காக உள்ளன. விபத்துகள்
நிகழும் பட்சத்தில் அரை மணிக்கும் குறைவான நேரத்தில் சம்பவ
இடத்தை அடைவது எங்களின் பிரதான நோக்கமாகும் என்று அவர்
குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நிகழும் போது நீண்ட தொலைவுக்கு
போக்குவரத்து நெரில் ஏற்படுவதை எங்களின் அனுபவத்தில்
கண்டுள்ளோம். இதனால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்காக சம்பவ
இடங்களுக்கு அருகில் எங்கள் உறுப்பினர்களை நிறுத்தவிருக்கிறோம்
என்றார் அவர்.
சரவாக் மாநிலத்தைப் பொறுத்த வரை நோன்பு பொருநாள் காலத்தில் பான்
போர்னியோ நெடுஞ்சாலையில் தமது துறை தீயணைப்பு வீரர்களை
நிறுத்தாது என்றும் அதற்கு மாறாக இங்கு ரோந்துப் பணிகள்
மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.


