ஷா ஆலம், மார்ச் 20: இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை சிலாங்கூர் அரசு 60
கோடியே 55 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியை வருமானமாக
ஈட்டியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் வசூலிக்கப்பட்டத் தொகையைவிட
இது 3.2 கோடி வெள்ளி அதிகமாகும் என்று அவர் சொன்னார்.
எங்களின் வருடாந்திர வருமான இலக்கில் கால் பங்கை (25.77 விழுக்காடு)
இந்த தொகை தாண்டி விட்டது என்று அவர் நேற்று இங்குள்ள ஜூப்ளி
பேராக் மண்டபத்தில் நடைபெற்ற மஹாபா ரமலான் மடாணி 2025
நிகழ்வில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
இவ்வாண்டில் 235 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்ட சிலாங்கூர்
அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் நிதி நிலைமை வலுப்பெற்றுள்ளதாகக் கூறிய மந்திரி
புசார், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 389.8 கோடி வெள்ளியாக இருந்த
மாநிலத்தின் நிதிக் கையிருப்பு இவ்வாண்டு 64 கோடியே 35 லட்சத்து 10
ஆயிரம் வெள்ளி அதிகரித்து 454.2 கோடி வெள்ளியாகப் பதிவாகியுள்ளது
என்றார்.
கூடுதலாக, சில கட்டமைப்பு சீரமைப்புகளின் வழி கச்சா நீர் எடுக்கும்
கட்டணத்தை மறுஆய்வு செய்வதன் மூலம் மேலும் 7.4 கோடி வெள்ளியை
வருமானமாகப் பெற இயலும் என்றார் அவர்.


