ஷா ஆலம், மார்ச் 19 - அத்தியாவசியப் பொருள்களை மலிவான
விலையில வழங்கக்கூடிய மெகா ஏஹ்சான் ரஹ்மா விற்பனை இம்மாதம்
26 முதல் 28 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த பெரிய அளவிலான மலிவு விற்பனையை நடத்துவதற்கு இதுவரை
12 சட்டமன்றத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர்
விவசாய மேம்பாட்டுக் கழகத்தின (பி.கே.பி.எஸ்.) தலைமைச்
செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் முகமது கைரில் முகமது
ராஸி கூறினார்.
சுங்கை துவா, பாண்டான் இண்டா, பாயா ஜெராஸ், கோத்தா அங்கிரிக்,
தாமான் டெம்ப்ளர், சபாக், பத்து தீகா, புக்கிட் அந்தாராபங்சா, செமினி,
மேரு, தஞ்சோங் சிப்பாட், கோத்தா கெமுனிங் ஆகியவையே மலிவு
விற்பனை நடைபெறுவதற்கு அடையாளம் காணப்பட்ட தொகுதிகளாகும்
என அவர் தெரிவித்தார்.
இது தவிர, இந்த விற்பனையை நடத்துவதற்கு பொருத்தமான இடங்களை
தாங்கள் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மீடியா
சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த மலிவு விற்பனை நடைபெறும் மூன்று தினங்களில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இடங்களில் தலா 1,500 கோழிகள் விற்கப்படும்
என அவர் மேலும் கூறினார்.
இந்த மெகா மலிவு விற்பனையில் கோழி, மீன், முட்டை, சமையல்
எண்ணெய், அரிசி, இறைச்சி தவிர்த்து இதர வகை உணவுப் பொருள்களும்
விற்பனைக்கு வைக்கப்படும் என அவர் சொன்னார்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தேங்காய் பால், வெங்காயம், காய்ந்த
மிளகாய், நிலக்கடலை, நாசி ஹிம்பிட் ஆகியவை இந்த விற்பனையில்
இடம் பெறும் இதர பொருள்களாகும் என்றார் அவர்.
இவ்வாண்டு இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை
ஒதுக்கீடு செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்
எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை குறைப்பதில் மாநில
அரசு காட்டி வரும் அக்கறையை இந்த திட்டம் புலப்படுத்துவதாக உள்ளது.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை
பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள
கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது
http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து
கொள்ளலாம்.


