பத்து பஹாட், மார்ச் 19 - இம்மாத தொடக்கத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தாயான பெண்மணி ஒருவரை படுகொலை செய்ததாக பண்ணைத் தொழிலாளி மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் 29 வயதான முகமது பிர்டாவுஸ் பக்தியார் என்ற அந்த ஆடவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி மாலை 5.09 மணியளவில் ஸ்ரீ காடிங், கம்போங் பாருவில் உள்ள ஒரு வீட்டில் சியாரா நூருல் மஸ்துரா அப்துல்லா (31) என்பவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக முகமது பிர்டாவுஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை, மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஷரிபா நடாஷா சைட் அகமது வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
தடயவியல் அறிக்கையைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சம்பந்தப்பட்டப் பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் ஸ்ரீ காடிங், கம்போங் பாருவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்படுவதற்கு வழிவகுத்தது.
இச்சம்பவத்தில் அப்பெண் 74 விழுக்காடு தீக்காயங்களுக்குள்ளாகி மறுநாள் உயிர்ழந்தார். சந்தேக நபருக்கு 13.5 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டு சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பத்து பஹாட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி கடந்த மார்ச் 11ஆம் தேதி கூறியிருந்தார்.


