(ஆர்.ராஜா)
கோலாலம்பூர், மார்ச் 19 - காஸாவில் உதவிகளை வழங்கும் பணியில்
ஈடுபட்டிருந்த மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு
எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் கோரத் தாக்குதல்களுக்கு எதிராக
மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கானஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பாராய்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் அக்கோரச் செயல், போர் நிகழும் பகுதிகளில் உள்ள
மனிதாபிமான பணியாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அனைத்துலகச்
சட்டங்களுக்கும் ஜெனிவா மாநாட்டு பிரகடனத்திற்கும் முரணாக உள்ளது
என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்
காஸாவின் வட பகுதியிலுள்ள பெய்ட் லாஹ்யாவில் கடந்த சனிக்கிழமை
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மாப்பிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய
அமைப்பின் ஆலோசக மன்ற உறுப்பினர்களான எட்டு மனிதாபிமானப்
பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிற்பகல் 1.30 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது
போரில் வீடுகளை இழந்தவர்களுக்காக தற்காலிக கூடாரங்களை
அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த மனிதாபிமானப் பணியாளர்கள்
ஈடுபட்டிருந்தனர்.
இது தவிர, நேற்று அதிகாலை இஸ்ரேலியப் படைகள் நடத்திய திடீர்
வான் தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறார்கள் உள்பட சுமார் 400 பொது
மக்கள் உயிரிழந்துள்ளனர். இது அனைத்து தரப்பினரும்
வேதனைப்படக்கூடிய மற்றும் கண்டிக்கக் கூடிய ஒரு மோசமானத்
தாக்குதலாகும் என அவர் கூறினார்.
புனித நோன்பு மாதத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்
கொள்ள முடியாத மற்றும் அனைத்துலகச் சமூகம் வன்மையாக கண்டிக்க
வேண்டிய ஒரு செயலாகும் என அவர் குறிப்பிட்டார்.
காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும்
என்பதோடு மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு
சென்றடைவதை அனைத்துலகச் சமூக உறுதி செய்ய வேண்டும் என
அவர் கேட்டுக் கொண்டார்.
பிரார்த்தனைகள் மற்றும் பொருளுதவி மூலம் நாமும் பாலஸ்தீன
மக்களின் நலன் காப்பதில் பங்கினை ஆற்ற முடியும். கேட்பாற்ற
நிலையில் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறுவதை நாம் வெறுமனே
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. காஸா மக்களுக்கு
மனவுறுதியும் உரிய பாதுகாப்பும் கிடைக்க நாம் அனைவரும்
இறைவனைப் பிரார்த்திப்போம் என அவர் அந்த அறிக்கையில் கேட்டுக்
கொண்டார்.
.


