ஈப்போ, மார்ச் 19 - ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பூர்வக்குடி ஆடவர் ஒருவர் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் சுங்கை சிப்புட், லாசாவில் உள்ள கம்போங் கோலா செனேயினில் உள்ள ஆற்றில் நேற்று நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட நபரான அம்ரான் அஹின் (வயது 43) சம்பவம் நிகழ்ந்த போது அவர் தன் தம்பியுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வேகமான நீரோட்டம் காரணமாக அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து நேற்றிரவு 9.34 மணிக்கு தமது துறைக்குத் தகவல் கிடைத்ததாகப் பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.
சுங்கை சிப்புட், கோல கங்சார் மற்றும் ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் காணாமல் போனதாக நம்பப்படும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் தேடுதல் வேட்டை காலை 8 மணி முதல் நடத்தப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


