புத்ராஜெயா, மார்ச் 19- ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று காலை இங்குள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகம் (எம்.ஏ.சி.சி.) வந்தார்.
தம்மைத் தொடர்புபடுத்தக்கூடிய இந்த ஊழல் விசாணையில் ஐந்தாவது நாளாக சாட்சியம் அளிப்பதற்காக இஸ்மாயில் இன்று காலை 9.57 மணியளவில் இங்குள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்தடைந்தார்.
இந்த விசாரணை தொடர்பில் அவர் நேற்றும் சாட்சியமளிப்பதாக இருந்தது. எனினும் ஏதோ காரணத்தால் வாக்குமூலப் பதிவு நடைபெறவில்லை.
கடந்த 2021 ஆகஸ்டு முதல் 2022 நவம்பர் வரை பிரதமராகப் பதவி வகித்த போது அறிமுகப்படுத்திய ‘மலேசிய குடும்பம்‘ திட்டத்தை பிரபலப்படுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகப் பெறப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் விசாரணைக்கு பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் உட்படுத்தப்படுள்ளார்.
பாதுகாப்பு இல்லம் ஒன்றிலிருந்து பல்வேறு நாடுகளின் நாணயங்களை உள்ளடக்கிய 17 கோடி வெள்ளி ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையில் இஸ்மாயில் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கடந்த மார்ச் 3ஆம் தேதி கூறியிருந்தார்.
அந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 16 கிலோ அசல் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக 20 லட்சம் வெள்ளியை உட்படுத்திய 13 வங்கிக் கணக்குகளை எம்.ஏ.சி.சி. முடக்கியது.


