குவா மூசாங், மார்ச் 19- மூன்று இடங்களில் ஏற்பட்ட மண் அமிழ்வு காரணமாக போக்குவரத்துக்கு மூடப்பட்ட குவா மூசாங்-லோஜிங் சாலையின் 78வது கிலோ மீட்டர் பகுதி நோன்புப் பெருநாளின் போது வீடு திரும்புவோரின் வசதிக்காக வரும் மார்ச் 28ஆம் தேதிக்கு முன்னதாக இலகு ரக வாகனங்களுக்குத் திறக்கப்படும்.
இருபது லட்சம் வெள்ளி செலவிலான அந்த சாலை சீரமைப்புத் திட்டப் பணிகள் இதுவரை 50 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக பொதுப்பணிதுறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் கூறினார்.
அச்சாலையில் பூமி உ.ள்வாங்கிய சம்பவம் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நோன்பு பெருநாளுக்கு முன்னதாக அச்சாலையின் ஒரு தடத்தை போக்குவரத்துக்கு திறந்து விடுவோம். நோன்பு பெருநாளுக்குப் பின்னர் இரு தடங்கள் திறக்கப்படும் என அவர் சொன்னார்.
அச்சாலையில் ஏற்பட்ட குழிகளை பொதுப்பணித்துறை மூடியப் பின்னர் பொது மக்கள் அந்த வழித்தடத்தைப் பயன்படுத்த தொடங்கி விட்டதாக கூறிய அகமது மஸ்லான். எனினும், அது அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறக்கப்படவில்லை என்றார்.
வாகனமோட்டிகள் குவா மூசாங்-கோயான்-ரிங்லேட்-தாப்பா-ஈப்போ-கேமரன் மலைச் சாலையை மாற்றுவழியாகப் பயன்படுத்தலாம் என அவர் மேலும் கூறினார்.
முன்னதாக அவர், இங்குள்ள வனவிலங்கு காப்பகத்தில் மலாயன் புலிகளுக்கான இனப் பெருக்க வசதிகளை மேம்படுத்தும திட்டத்தைப் பார்வையிட்டார்.
பொதுப்பணித் துறையின் டெண்டர் மூலம் செயல்படுத்தப்படும் 33.25 லட்சம் வெள்ளி செலவிலான இத்திட்டம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்கப்படுகிறது.


