நிபோங் திபால், மார்ச் 19 - அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அதேவேளையில் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னுரிமை அளிக்கும்படி மாநில அரசுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்துள்ளார்.
நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக பரம ஏழ்மை ஒழிப்பு, வெள்ளம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
அடிப்படை வசதிகள் தவிர்த்து வேறு எந்த பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என என்னைக் கேட்டால் பரம ஏழ்மை மற்றும் வெள்ளப் பிரச்சனை என்று நான் கூறுவேன்.
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வோராண்டும் வெள்ளம் ஏற்படுகிறது. அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான விரைவான மற்றும் துணிச்சலான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்குள்ள பண்டார் தாசேக் முத்தியாரா, அபு உபைடா இப்னி அல்-ஜர்ரா பள்ளிவாசலில் நடைபெற்ற பினாங்கு மாநில நிலையிலான நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, கட்டுபடி விலையிலான பாக்காட் பாரு மடாணி வீடமைப்புத் திட்டத்தை மேம்படுத்தும் மாநில அரசின் நடவடிக்கையை பிரதமர் பெரிதும் பாராட்டினார். மிகப்பெரிய அளவிலான இந்த வீடமைப்புத் திட்டம் இவ்வாண்டில் தொடங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
பினாங்கு மாநிலத்தில் 35,000 வீடுகளை உள்ளடக்கிய இந்த வீடமைப்புத் திட்டம் 1,300 கோடி வெள்ளி செலவில் உருவாக்கப்படுகிறது. இந்த வீடமைப்புத் திட்டத்தில் நீச்சல் குளம், ஜிம்னேசியம், சமூக மண்டபம், விளையாட்டு பூங்கா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.


