புத்ராஜெயா, மார்ச் 19- சரக்கு வைக்கும் பகுதியில் தீ எச்சரிக்கை சமிக்ஞை கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து ஜாகர்த்தாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த எம்.எச்.720 விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தின் சரக்கு பகுதியில் தீயைக் கட்டுப்படுத்தும் சாதனங்களை செயல்படுத்துவது உள்பட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து 115 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் பயணம் செய்த அந்த விமானம் நேற்று மாலை 6.18 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
தரையிறங்கியவுடன் அந்த விமானம் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டு பயணிகளும் விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
தீயணைப்பாளர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தப் பின்னர் சரக்கு பகுதியின் கதவுகள் திறக்கப்பட்டன.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது தங்களின் தலையாயக் கடமை என்பதோடு பாதுகாப்பு விஷயத்தில் உயர்ந்தப்பட்ட கவனம் செலுத்துவது தங்களின் கடப்பாடாக இருந்து வருகிறது என அந்த விமான நிறுவனம் கூறியது.


