இஸ்கந்தார் புத்ரி, மார்ச் 18- இம்மாதம் 6 முதல் 11 வரை இஸ்கந்தார் புத்ரி மற்றும் ஸ்ரீ ஆலமில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து சோதனை நடவடிக்கைகளில் மூன்று போதைப்பொருள் பதனீட்டு மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மொத்தம் 1 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சிறப்பு நடவடிக்கையின் போது இங்குள்ள ஒரு தொழில் பேட்டைப் பகுதியில் போதைப்பொருள் பதப்படுத்துவதற்கு பயன்படும் பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்களை சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொழிற்சாலையை தமது தரப்பு வெற்றிகரமாக அம்பலப்படுத்தியதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம் குமார் கூறினார்.
இந்த அதிரடிச் சோதனையில் 25 முதல் 40 வயதுடைய
ஏழு பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், கைதானவர்களில் ஐந்து உள்ளூர்வாசிகளும் இரண்டு தைவானியரும் அடங்குவர் என்றார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று பேர் இரசாயன நிபுணர்கள் (மருந்துகள் தயாரிப்பவர்கள்) என நம்பப்படுகிறது. இருப்பினும், அவர்கள் முறையாக சான்று பெற்ற நிபுணர்கள் அல்ல, மாறாக சுயமாகக் கற்றுக் கொண்டவர்கள். அவர்களிடம் நாங்கள் மேலும் விசாரணைகளை நடத்தி வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கும்பல் அனைத்துலகச் சந்தையில் போதைப் பொருளை விநியோகிப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜோகூர் ஜெயா மற்றும் ஸ்ரீ ஆலமில் தீவிரமாக செயல்பட்டு வந்த இக்கும்பல் வேலியிடப்பட்ட பங்களாக்கள் மற்றும் தரை வீடுகளை போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளது என்று அவர் இன்று இஸ்கந்தார் புத்ரி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இச்சோதனைகளில் போதைப்பொருளைப் பதப்படுத்தும் பல்வேறு கருவிகள் மற்றும் உபகரணங்கள், மூன்று கார்கள், ஒரு லாரி, நகைகள் மற்றும் மூன்று வங்கிக் கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 1 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்


