கோலாலம்பூர், மார்ச் 18- மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாபிமானப் பணியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத மற்றும் அனைத்துலக சமூகம் வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு செயலாகும் என பிரதமர் துறை அமைச்சர் (சமய விவகாரங்கள்) டத்தோ டாக்டர் நாயிம் மொக்தார் கூறினார்.
கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மாப்பிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய அமைப்பின் ஆலோசக மன்ற உறுப்பினர்களான எட்டு மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டது குறித்து தாம் மிகுந்த வேதனை அடைவதோடு அச்செயலை கடுமையாக கண்டிப்பதாக அவர் சொன்னார்.
இந்த கோரத் தாக்குதல் மனிதாபிமானமற்ற செயலாகவும் மனுக்குல கோட்பாடுகளுக்கு முரணானதாகும் என அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் அச்செயல் போர் மண்டலங்களில் மனிதாபிமான பணியாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அனைத்துலகச் சட்டங்களுக்கு புறம்பானதாகவும் ஜெனிவா பிரகடனத்திற்கு முரணாகவும் உள்ளது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் துறையின் கீழ் உள்ள தமது அமைச்சு பாலஸ்தீனர்களுக்கு தொடர்ந்து உதவும் கடப்பாட்டை கொண்டுள்ளதாகக் கூறிய அவர், தொடரும் அந்த அட்டூழியத்தை கண்டிக்கும் விஷயத்தில் உலக நாடுகள் இனியும் அமைதி காக்க முடியாது என்றார் அவர்.
காஸாவின் வட பகுதியில் உள்ள பெய்ட் லாஹ்யாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மாப்பிம் மனிதாபிமான பணியாளர்கள் எண்மர் உயிரிழந்தனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் வீடுகளை இழந்தவர்களுக்காக தற்காலிக கூடாரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த மனிதாபிமானப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.


