ஈப்போ, மார்ச் 18- பஞ்சு பொதிகள் ஏற்றியிருந்த டிரெய்லர் லோரியின் பின்புறம் மணல் லோரி ஒன்று மோதி தீப்பற்றியதில் அதில் பயணித்த தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 331.8வது கிலோ மீட்டரில் இன்று காலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் இன்று காலை 7.46 மணியளவில் தங்களுக்குப் புகார் கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபோராட்ஸி நோர் அகமது கூறினார்.
இந்த தகவலின் அடிப்படையில் பீடோர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று காலை 7.57 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் தெரிவித்தார்.
பஞ்சு பொதிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த டிரெய்லர் லோரியின் பின்புறம் மணல் ஏற்றிய டிரெய்லர் லோரி மோதியிருந்தது கண்டறியப்பட்டது. தீக்கிரையான மணல் லோரியின் இடிபாடுகளில் 40 வயது மதிக்கத்தக்க அதன் ஓட்டுநர் சிக்கியுள்ளதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர் என அவர் சொன்னார்.
அந்த ஓட்டுநரின் மகன் என கருதப்படும் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் எரிந்த நிலையில் அந்த லோரியிலிருந்து மீட்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.


