வாஷிங்டன், மார்ச் 18- காஸா பகுதி மீது தாங்கள் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று அறிவித்துள்ளதாக அனடோலு ஏஜென்சி செய்தி நிறுஸனம் தெரிவித்தது.
உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஐ.டி.எஃப். (இஸ்ரேல் தற்காப்புப் படை) மற்றும் ஷின் பெட் ஆகியவை இப்போது காஸா பகுதி முழுவதும் ஹமாஸ் இலக்குகள் மீது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்குகியுள்ளன என்று இராணுவப் பேச்சாளர் அவிச்சே அத்ரே எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் சிறார்கள் உட்பட குறைந்தது 110 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சிவில் அவசர சேவைகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸாவில் ஹமாஸ் தரப்பினருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸும் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததோடு அமெரிக்க அதிபரின் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் மற்றும் சமரசக் குழுவினர் முன்வைத்த அனைத்து திட்டங்களையும் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.


