கோலாலம்பூர், மார்ச் 18- உள்நாட்டு படைப்பாளிகளின் பதிப்புரிமையை பாதுகாக்க இசைத் துறை உரிமத் தொகை (ராயல்டி) மேலாண்மை முறை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸாம் முகமது அலி கூறினார்.
இந்நோக்கத்திற்காக உரிமத் தொகையை வசூலிப்பதற்கு பொறுப்பேற்கக்கூடிய கூட்டு மேலாண்மை நிறுவன (சிஎம்ஒ) செயல்பாட்டு வழிகாட்டியை மலேசிய அறிவார்ந்த சொத்துடைமை கழகத்தின் (மைஐபிஒ) வாயிலக அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது என்று அவர் சொன்னார்.
படைப்பாளிகள் சார்பாக உரிமத் தொகையை வசூலிப்பதற்கு ஏதுவாக சி.எம்.ஓ,வுக்கு 1987ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் 27ஏ பிரிவின் கீழ் மைஐபிஒ லைசென்ஸ் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இத்தகைய வழிகாட்டு எதுவும் நடைமுறையில் இல்லை. தற்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்த புதிய விதியின் கீழ் சி.எம்.ஒ.க்களின் அறிவிப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான எந்தெவொரு விஷயத்திலும் வழிகாட்டுதல்களை வெளியிட மைஐபிஒ இப்போது அதிகாரம் பெற்றுள்ளது என அவர் சொன்னார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை பதிப்புரிமையைப் பதிவு செய்வதற்கு 17,402 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இசைப் படைப்புகள் மற்றும் ஒலிப்பதிவு படைப்புகளுக்கு பதிப்புரிமைப் பெறுவதற்கு மிகக் குறைவாக அதாவது முறையே 170 மற்றும் 146 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


