ஷா ஆலம், மார்ச் 18- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான விசாரணையுடன் தொடர்புடைய அனைத்து தகவலையும் தாங்கள் ஆராய்ந்து வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) அறிவித்துள்ளது.
ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி மற்றும் 17.7 கோடி வெள்ளி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் ஆகியவற்றுடன் விசாரணை நின்றுவிடாது என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
விசாரணை சுமூகமாக நடந்து வருகிறது. ஏதேனும் பிரச்சினை எழுந்தால் எம்.ஏ.சி.சி. தொடர்ந்து விசாரிக்கும் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு, மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கணக்கியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைப் பேராசிரியருக்கான நியமனக் கடிதத்தை யு.ஐ.டி.எம். துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ ஷாஹ்ரின் சாஹிப் @ சாஹிபுனிடமிருந்து
பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒன்பதாவது பிரதமரிடம் கேட்கப்பட்டு பதில் பெற வேண்டிய பல விஷயங்கள் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி தொடரும் என்று அசாம் மேலும் கூறினார்.
'மலேசிய குடும்பம்' எனும் திட்டத்தை ஊக்குவிப்பது மற்றும் பிரபலப்படுத்துவதற்காக பெறப்பட்ட நிதி மற்றும் செலவு தொடர்பான விவகாரங்களில் மட்டும் இந்த விசாரணை கவனம் செலுத்தவில்லை. மாறாக, இஸ்மாயில் அறிவித்த சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் உட்பட சேகரிக்கப்பட்ட உளவுத்துறையின் புதிய தகவல்களின் அடிப்படையிலும் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என சொன்னார்
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆறு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு நேற்று புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய இஸ்மாயில் கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்தை செலவிட்டார்.
பாதுகாக்கப்பட்ட இல்லம் ஒன்றிலிருந்து பல்வேறு நாடுகளின் நாணயங்களை உள்ளடக்கிய 17 கோடி வெள்ளி ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான
விசாரணையில் இஸ்மாயில் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கடந்த மார்ச் 3ஆம் தேதி கூறியிருந்தார்.
அந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 16 கிலோ அசல் தங்கமும் கைப்பற்றப்பட்டது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக 20 லட்சம் வெள்ளியை உட்படுத்திய 13 வங்கிக் கணக்குகளை எம்.ஏ.சி.சி. முடக்கியது.


