குளுவாங், மார்ச் 15- இங்குள்ள சிம்பாங் ரெங்கம், கம்போங் காஜா மற்றும் தங்காக் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இருபத்தாறு முதல் 46 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் அதிகாலை 1.38 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடத்தப்பட்ட 'ஓப்ஸ் பிந்து' சோதனை நடலடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டனர் என்று குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.
.இந்த சோதனையில் ஏழு மடிக்கணினிகள் மற்றும் ஒரு ப்ரொஜெக்டர் ஆகியவற்றோடு கொள்ளை நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.
இவை தவிர ஒரு நீல நிற பாதுகாப்பு பெட்டகம், விலையுயர்ந்த பழுப்பு நிற கைப்பை மற்றும் ஒரு பெரேடுவா அல்சா கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஏழு பேருக்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான கடந்த கால பதிவுகள் இருப்பது ஒரு சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், அவர்கள் அனைவரும் 17 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கைதான அனைவரும் தண்டனைச் சட்டத்தின் 457, 448 மற்றும் 380 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஆறு பேருக்கு போதைப் பழக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


