மலாக்கா, மார்ச் 15- இங்குள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் 14 வயது மாணவர் பள்ளியின் சிற்றுண்டிச் சாலைக்கு நடந்து செல்லும்போது திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் பள்ளி இடைவேளை நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
பள்ளியின் கைப்பந்து விளையாட்டாளரான அந்த முஸ்லிம் அல்லாத இரண்டாம் படிவ மாணவர் சிற்றுண்டிச் சாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தத போது
திடீரென பள்ளி திடலுக்கு அருகில் மயங்கி விழுந்தார் என அவர் தெரிவித்தார்.
உடனடியாக அந்த அந்த மாணவர் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். சுமார் 30 நிமிடங்களுக்கு சி.பி.ஆர். எனப்படும் செயற்கை சுவாச முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது, ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மாணவர் இறந்துவிட்டதை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உறுதிப்படுத்தினார் என்று அவர் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறினார்.
சம்பவத்திற்கு முன்பு அந்த மாணவர் காலையில் உடற்கல்வி வகுப்பில் கலந்து கொண்டதாகவும் இந்த மரணத்தில் எந்த குற்றத்தன்மைக்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான ஆய்வக அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தற்போதைக்கு இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


