ஜோகூர் பாரு, மார்ச் 15- மூன்று வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி ஒருவர் கருகி மாண்ட வேளையில் நால்வர் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் மாசாய், தாமான் பெர்மாஸ் ஜெயா, ஜாலான் பெர்மாஸ் 2/4 இல்ல் நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்று பின்னிரவு 12.13 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாசீர் கூடாங் தீயணைப்பு நிலையம் மற்றும் மவுண்ட் ஆஸ்டின் தன்னார்வ குழுவினரை உள்ளிடக்கிய 33 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் கட்டளை அதிகாரி சைபுல்பஹாரி மாபோப் கூறினார்.
இந்த தீவிபத்தில் முகமது அரிஸ் சமார் (வயது 84) உயிரிழந்த வேளையில் அவரின் மகளான ஹமிசா (வயது 57) மற்றும் அவரின் பேரப்பிள்ளைகளான எஸாத்தி ஹைடா அப்பாண்டி (வயது 21) எஸாத்தி ஹஸ்ரினா (வயது 18) மற்றும் எஸாத்தி ஹடிரா (வயது 16) ஆகிய நால்வரும் உயிர்த்தப்பினர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த தீவிபத்தில் மொத்தம் நான்கு வரிசை வீடுகள் பாதிக்கப்பட்டன. இரு விடுகள் 20 விழுக்காடு சேதமடைந்த வேளையில் மேலும் ஒரு வீடு 80 விழுக்காடு அழிந்தது என்று அவர் சொன்னார்.
எண்பது விழுக்காடு பாதிக்கப்பட்ட வீட்டின் மேல் மாடியில் அந்த மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


